மாவட்ட செய்திகள்
தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா உள்பட 6 யானைகள் மைசூரு அரண்மனைக்கு வருகை

மைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானை உள்பட 6 யானைகள் நேற்று மைசூரு அரண்மனைக்கு மலர்கள் தூவி, பூரண கும்ப மரியாதையுடன் அழைத்து வரப்பட்டன.
மைசூரு,

மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தசரா விழா உலகப்புகழ் பெற்றது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். அந்த ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்தும் செல்லும். அதற்கு பக்க பலமாக மற்ற யானைகள் பின்தொடர்ந்து செல்லும்.

யானைகள் புடை சூழ தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து செல்லும் காட்சி காண்போரை பரவசமடையச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி பல்வேறு சிறப்புமிக்க ஜம்பு சவாரி ஊர்வலத்தில், கடந்த சில ஆண்டுகளாக தங்க அம்பாரியை அர்ஜூனா யானை சுமந்து வருகிறது. அர்ஜூனா யானை உள்பட ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளும், யானைகள் முகாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து யானைகளும் கும்கி பயிற்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டு தசரா விழாவின்போது அந்த யானைகள் 2 கட்டமாக யானைகள் முகாம்களில் இருந்து அழைத்து வரப்படும். அது ஒரு விழா போலவே நடைபெறும். அதை கஜபயணம் என்று அழைத்து வருகிறார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தசரா விழா அடுத்த மாதம்(அக்டோபர்) 10-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முதற்கட்டமாக ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளை அழைத்து வரும் கஜபயண நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகரஒலே வனப்பகுதியில் நடந்தது. அதாவது நாகரஒலே வனப்பகுதியில் அமைந்திருக்கும் யானைகள் முகாம்களில் இருந்து தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானை மற்றும் வரலட்சுமி, ஷைத்திரா, தனஞ்ஜெயா, கோபி, விக்ரமா ஆகிய 6 யானைகளும் லாரிகள் மூலம் மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன.

மைசூருவுக்கு அழைத்து வரப்பட்ட 6 யானைகளும் மைசூருவில் உள்ள ஆரண்ய பவனத்தை வந்தடைந்தன. அங்கு அந்த யானைகளுக்கு தேவையான உணவுகள் கொடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அந்த 6 யானைகளும் மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரண்ய பவனத்தில் இருந்து அர்ஜூனா யானை தலைமையில், 6 யானைகளும் ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன.

அப்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று யானைகளை பார்த்து ஆரவாரம் செய்தனர். பலர் தங்களுடைய செல்போன்களில் செல்பியும், வீடியோவும் எடுத்து மகிழ்ந்தனர்.

அரண்மனை கிழக்கு திசையில் இருக்கும் முக்கிய நுழைவுவாயிலான ஜெயமார்த்தாண்டா நுழைவுவாயிலை யானைகள் வந்தடைந்ததும், அங்கிருந்த சாமுண்டீஸ்வரி கோவில் அர்ச்சகர் சந்திரசேகர், யானைகளுக்கு ஆரத்தி எடுத்து, மலர்கள் தூவி சிறப்பு பூஜை செய்தார்.

அதையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க யானைகள் அரண்மனைக்குள் அழைத்து வரப்பட்டன. அப்போது யானைகள் தும்பிக்கைகளை தூக்கி வணக்கம் செலுத்தியபடி உள்ளே வந்தன.

அப்போது யானைகளை மாவட்ட பொறுப்பு மந்திரி ஜி.டி.தேவேகவுடா, தனது மனைவியுடன் பூரண கும்ப மரியாதை செலுத்தி யானைகளை அழைத்து வந்தார். மேலும் அரண்மனையின் 2-வது மாடியில் இருந்தபடி ஏராளமான இளம்பெண்கள் யானைகள் மீது மலர்களை தூவி அவற்றை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

அதையடுத்து அர்ஜூனா உள்பட 6 யானைகளும் அரண்மனைக்குள் யானைகள் தங்குவதற்கு என்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டன. அங்கு யானைகளுக்கு பழங்கள், வெள்ளம், கரும்பு உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி நகிமா சுல்தானா, மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், போலீஸ் கமிஷனர் சுப்பிரமணீஸ்வரர் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.