மாவட்ட செய்திகள்
14 வயதிற்குட்பட்டோரை பணிகளில் ஈடுபடுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் 14 வயதிற்குட்பட்டோரை பணிகளில் ஈடுபடுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை விடுத்தார்.
தர்மபுரி,

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் பொன்னுராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் 22 சிறப்பு பயிற்சி மையங்களில் 437 குழந்தை தொழிலாளர்கள் தங்கி படித்து வருகிறார்கள். குழந்தை தொழிலாளர்களுக்காக செயல்படும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் அரசு செலவில் வயதுக்கேற்ற சிறப்பு கல்வி, தொழிற்கல்வி, பாடபுத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடை, மதிய உணவு, பஸ்வசதி, விடுதி வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன. மாத ஊக்கத்தொகையாக ரூ.150 வழங்கப்படுகிறது. சிறப்பு பயிற்சிக்கு பின் வயதுக்கேற்ற வகுப்பில் பொதுப்பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டவர்கள் உயர்கல்வி கற்க ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தொழில் முனைவோருக்கான பயிற்சி, வழிகாட்டுதல், மானிய கடனுதவி வழங்கப்படுகிறது.

குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கு சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி மேம்பாட்டு பணிகளை செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவோருக்கு சட்டப்படி 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கவும், அபராதமும் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

15 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரின் உடல், மனம், சமூக வளர்ச்சி ஆரோக்கியமான சூழ்நிலையில் மேம்பட வேண்டும். அபாயகரமானவை என பட்டியலிடப்பட்ட தொழில்கள், பணிகளில் இவர்களை ஈடுபடுத்தக்கூடாது. இதை மீறுவோருக்கு சட்டப்படி 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் குழந்தை தொழிலாளராக இருந்து தற்போது இளங்கலை சட்டம் படித்து முடித்த பிரியா, மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படிக்கும் கார்த்திக் ஆகியோருக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், உதவி திட்ட அலுவலர்ரவி சங்கர் நாத் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.