பெண்களை கடத்தி வருவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கண்டித்து போராட்டம்

இளைஞர்கள் காதலிக்கும் பெண்களை கடத்தி வருவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கண்டித்து போராட்டம் நடந்தது.

Update: 2018-09-05 23:00 GMT
மும்பை,

மும்பை காட்கோபரில் நடந்த உறியடி திருவிழாவில், பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், இளைஞர்களிடம் அவர்கள் காதலிக்கும் பெண்கள் காதலை ஏற்க மறுத்தால் கடத்தி கொண்டு வந்து தருவதாக கூறினார். மேலும் இதற்காக அவர் தனது செல்போன் எண்ணையும் கூட்டத்தில் பகிர்ந்தார்.

அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ராம் கதமுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினர்.

இந்த நிலையில், ராம் கதம் எம்.எல்.ஏ.வை கண்டித்து நேற்று மும்பை, தானே உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. தேசியவாத காங்கிரஸ் மற்றும் நவநிர்மாண் சேனா கட்சியினர் ராம் கதமுக்கு எதிராக இந்த போராட்டங்களை நடத்தினார்கள்.

இதில், அந்த கட்சிகளை சேர்ந்த பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு ராம் கதமுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அவரது உருவப்படத்தை அவமதித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதற்கிடையே ராம் கதம் சர்ச்சை பேச்சுக்கு நேற்றும் அரசியல் கட்சிகள் கண்டன குரல் எழுப்பின. குறிப்பாக ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தைரியம் இருந்தால் ராம்கதம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு சவால் விடுத்தார்.

பிரச்சினையை பூதாகரமாக்கி வரும் எதிர்க்கட்சியினருக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறுகையில், “சர்ச்சை பேச்சுக்கு சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. வருத்தம் தெரிவித்து விட்டார். எனவே பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியினர் பிரச்சினையை பெரிதாக்க பார்க்கின்றனர். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை பற்றி கவலை கொள்ளாமல் குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்றார்.

மேலும் செய்திகள்