நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு காங்கிரஸ் அரசை பொறுப்பாக்குவதா? - பிரதமர் மோடிக்கு சிவசேனா கண்டனம்

நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசை பொறுப்பாக்குவதா? என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2018-09-05 23:15 GMT
மும்பை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய பா.ஜனதா அரசு மீது ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக தாக்கி விமர்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்த போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் நாட்டின் புகழும் சரிகிறது என்று கூறுவதை வழக்கமாக கொண்டு இருந்தது. இப்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.100 ஆக வீழ்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதனால் நாட்டின் மதிப்பு உயர்ந்து விட்டதா?.

நாட்டின் பொருளாதாரம் மரண படுக்கையில் உள்ளது. ஆனால் உலகின் 6-வது பெரிய பொருளாதார நாடு என்று கூறிக்கொள்வது நகைப்பூட்டுவதாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போனதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு தான் பொறுப்பு என்று பதிலடி கொடுப்பதிலேயே பிரதமர் மோடி நேரத்தை விரயம் செய்கிறார். அவர் கடந்த 4 ஆண்டுகள் ஆட்சியை நடத்தி உள்ளார் என்பதை மறந்து விட்டு இவ்வாறு பேசுவதா?

பெட்ரோல், டீசல் விலை வானத்தை நோக்கி பறக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ விரைவில் தொட இருக்கிறது. வேலைவாய்ப்பு இன்மையால் இளைஞர்கள் வீதிக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. உணவு பொருட்களின் விலை எகிறி விட்டது. சமையல் கியாஸ் விலையும் அதிகரித்து வருகிறது. புதிய முதலீடுகள் சரிகிறது. இதனால் நாட்டில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்