கோவிலுக்கு செல்ல வழிவிடாததை கண்டித்து சாலைமறியல்

திமிரி அருகே கோவிலுக்கு செல்ல வழிவிடாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-09-05 22:00 GMT
ஆற்காடு, 


திமிரி அருகே உள்ள ஆயிரமங்கலம் கிராமத்தில் ஏகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை கிராம மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கட்டி வழிபாடு மற்றும் திருவிழாக்கள் நடத்தி வந்தனர். கோவிலுக்கு செல்லும் மக்கள் தனிநபர்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு செல்பவர்கள் தங்கள் நிலத்தின் வழியாக செல்லக்கூடாது என்று தனிநபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 3 மாதங்களாக கோவில் பூட்டப்பட்டு திருவிழாக்கள் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து வருகிற 18-ந்தேதி ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை ஆயிரமங்கலம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏகவல்லி அம்மன் கோவிலில் தினசரி பூஜைகள் செய்யவும், திருவிழாக்கள் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியும், கோவிலுக்கு செல்ல பாதைவசதிசெய்ய வலியுறுத்தியும் ஆற்காடு- ஆரணி சாலையில் உள்ள வளையாத்தூர் கூட்ரோடு அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ஆற்காடு தாசில்தார் சுமதி, ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வம், திமிரி இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்