மாவட்ட செய்திகள்
சிறுமிக்கு இளம்வயது திருமணம்: போக்சோ சட்டத்தில் தாய்-பாட்டி கைது

சிறுமிக்கு இளம்வயது திருமணம் செய்து வைத்த தாய், பாட்டியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும், அவருடைய உறவினர் ஒருவருக்கும் சிறுமியின் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்திருந்தனர். இது குறித்து அறிந்த மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதன்பிறகு மற்றொரு முறையும் சிறுமிக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதனையும் அதிகாரிகள் தடுத்தனர்.

பின்னர் 3-வது முறையாகவும் சிறுமிக்கும், உறவினருக்கும் திருமண ஏற்பாடு செய்தனர். அதன்படி திருமணமும் நடைபெற்றது. திருமணம் ஆன சில நாட்களில் சிறுமி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என கடந்த 10.11.2016-ம் ஆண்டு மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாயமான சிறுமி மோகனூர் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். அப்போது அவர் தனது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் தனக்கு இளம் வயது திருமணம் செய்து வைத்ததாக புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய், பாட்டியை கைது செய்தனர்.