தியேட்டர், கடை உரிமையாளர்கள் 6 பேர் மீது நடவடிக்கை - தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் பொட்டலப்பொருட்களின் விதிப்படி தியேட்டர், கடை உரிமையாளர்கள் 6 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் லெனின் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-05 22:30 GMT
திருப்பூர்,

சென்னை தொழிலாளர் ஆணையாளர் நந்தகோபால் உத்தரவின்படி, கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் செந்தில்குமாரி, தொழிலாளர் இணை ஆணையாளர் ரமேஷ் ஆகியோர் அறிவுரைப்படி திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) லெனின் தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள், வணிக வளாகங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பொட்டலப்பொருட்கள் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? என்று தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

15 தியேட்டர்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 2 தியேட்டர்களில் பொட்டலப்பொருட்கள் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவது கண்டறியப்பட்டது. அதுபோல் 9 வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 4 கடைகளில் விற்கப்படும் பொட்டலப்பொருட்களில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் உரிய அறிவிப்புகள் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2 தியேட்டர்களின் உரிமையாளர்கள் மீதும், 4 கடைகளின் உரிமையாளர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

வணிகர்கள் உபயோகத்தில் வைத்திருக்கும் அனைத்து வகையான எடையளவு கருவிகளையும் உரிய காலத்தில் மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு கொள்ள வேண்டும். வியாபாரிகள் பயன்படுத்தும் மின்னணு தராசு ஆண்டுக்கு ஒருமுறையும், பிற எடையளவுகள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையும் மறுபரிசீலனை செய்து மறுமுத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு முத்திரையிடாத தராசுகளை பறிமுதல் செய்வதோடு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும். மேலும் முத்திரையிடப்பட்ட எடைகள் மற்றும் அளவைகள் சான்றிதழை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும்.

பொட்டலப்பொருட்களின் மீது தயாரிப்பாளர்கள், பொட்டலமிட்டவர் பெயர், முழு முகவரி, பொருளின் பெயர், எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை போன்ற விவரங்கள் அச்சிட வேண்டும். அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நுகர்வோர்கள் இதுதொடர்பான புகார்களை தொழிலாளர் துறை அறிமுகப்படுத்தியுள்ள TN-L-M-C-TS என்ற செல்போன் செயலி மூலம் தெரிவிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) லெனின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்