நாட்டுக்கோழி வளர்ப்பை லாபகரமாக்க குழுவாக செயல்பட வேண்டும் - திட்ட மதிப்பீட்டு ஆய்வறிக்கை விளக்க கூட்டத்தில் முடிவு

பொங்கலூர் பகுதியில் நாட்டுக்கோழி வளர்ப்பை லாபகரமாக்க குழுவாக செயல்படவேண்டும் என்று திட்ட மதிப்பீட்டு ஆய்வறிக்கை விளக்கக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2018-09-05 23:00 GMT
பொங்கலூர்,

பொங்கலூர் பகுதியில் உள்ள நாட்டுக்கோழி வளர்ப்பை லாபகரமாக்க குழுவாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீட்டு ஆய்வறிக்கை விளக்க கூட்டம் பொங்கலூரில் உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அப்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் பகுதியில் ஏராளமான நாட்டுக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் பெரும்பாலும் சாதாரண குறு விவசாயிகளால் நடத்தப்படுகிறது.

இந்த பண்ணையாளர்கள் பெரிய நிறுவனங்களில் இருந்து கோழி குஞ்சுகளை வாங்கி தங்கள் பண்ணைகளில் வளர்த்து குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் அவர்களிடமே திருப்பி வழங்கி விடுவார்கள். அவர்களுக்கு ஒரு கிலோவிற்கு குறிப்பிட்ட தொகை வளர்ப்பு கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வளர்ப்பு கூலி போதுமானதாக இல்லாததால் பல விவசாயிகள் கோழி வளர்ப்பை கைவிட்டு விடுகிறார்கள்.

அதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபடும் சாதாரண மற்றும் குறு விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டால் அவர்களுக்கு முழு மானியத்தில் நிதி உதவி வழங்கி வருகிறது.

இந்த குழுவில் சுமார் 45 விவசாயிகள் இருக்கவேண்டும். அந்த குழுவிற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதி உதவி வழங்குகிறது. இந்த நிதி உதவியை கொண்டு தீவனம் தயாரித்தல், ஆய்வகம், குஞ்சு பொறிப்பான் மற்றும் விற்பனை ஆகிய நான்கு விதமான கட்டமைப்புகளை உருவாக்கி கொள்ளவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிதி உதவி பெறுவதற்கான திட்ட ஆய்வறிக்கை மற்றும் மதிப்பீட்டு விளக்க கூட்டம் பொங்கலூரில் உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை குழுவின் இயக்குனர் சிவகண்ணன் வரவேற்றார். திட்டம் குறித்த ஆய்வறிக்கை பொறுப்பாளர் சிவசங்கரன் விளக்கி கூறினார்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் சிறு-குறு விவசாயிகள் மேம்பாட்டு ஆணையத்தின் துணை இயக்குனர் சதீஷ்குமார், தமிழ்நாடு சிறுதொழில்கள் மேம்பாட்டு வாரியத்தின் கிளை மேலாளர் சரவணபவா, மாவட்ட தொழில் மையத்தின் துணை பொறியாளர் பவித்ரா, சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியின் துணை மேலாளர் ஜெகதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். முடிவில் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி நன்றி கூறினார். இதில் நாட்டுக்கோழி வளர்க்கும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்