மாணவன் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவன் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-09-05 23:30 GMT
நல்லூர்,

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கல்லூரியில் 3-ம்ஆண்டு படித்து வரும் மாணவன் ஒருவன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி, அந்த மாணவனை கல்லூரி நிர்வாகம், இடைநீக்கம் செய்தது. இது தொடர்பாக மற்ற மாணவர்கள் ஒன்று சேர்ந்து மாணவனின் இடைநீக்கம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பேச முயன்றனர்.

அதற்காக அந்த மாணவனின் பெற்றோரையும் கல்லூரிக்கு வரவழைத்தனர். இதையடுத்து மாணவனின் பெற்றோர் கல்லூரி முதல்வர் அறைக்கு சென்று கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது கல்லூரி முதல்வருக்கும், மாணவனின் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த அறையில் இருந்த கல்லூரி துணை முதல்வர் தயாளன் திடீரென்று மாணவனின் தாயாரை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த விவகாரம் மற்ற மாணவர்களுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்தும், கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது கல்லூரி துணை முதல்வருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு தாசில்தார் ரவிச்சந்திரன், ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமலதா மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதை தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவனை கல்லூரியில் சேர்க்க கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் மாணவனின் தாயாரை கீழே தள்ளிய துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தாயார் ஊத்துக்குளி போலீசில் புகார் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்