வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து; 17 பெண்கள் காயம்

கடலூர் அருகே வேன் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 17 பெண்கள் பலத்த காயமடைந்தனர்.

Update: 2018-09-05 23:30 GMT
நெல்லிக்குப்பம், 

கடலூரை அடுத்த தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள கலையூர், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் புதுச்சேரி மாநிலம் மங்கலம் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் தங்களது கிராமத்தில் இருந்து ஒரு வேனில் தொழிற்சாலைக்கு சென்று வருவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று கலையூர் கிராமத்தை சேர்ந்த கவுரி (வயது 30), சிவரஞ்சினி (33), அருணா (22), மணிமொழி(22), அனிதா(21), தீபா (24), வள்ளி (19), கீர்த்தனா(19), அகிலா (17), பாத்திமா(29) உள்பட 17 பெண்கள் ஒரு வேனில் புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர். வேனை அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (28) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அந்த வேன் கடலூர் அருகே பள்ளிப்பட்டு-தென்னம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓட தொடங்கியது. பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் அந்த வேன் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் 17 பெண்களும், டிரைவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்ட அந்தவழியாக சென்ற பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்