மாவட்ட செய்திகள்
கூடுதலாக 800 டன் அரிசி ஒதுக்கீடு : ரேஷன்கடைகளில் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் ஏற்படும் தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 800 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர், 


வேலூர் மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகள் உள்ளன. அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு ரேஷன்கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக விண்ணப்பித்த 20 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆயிரம் பேர் புதிதாக ரேஷன்கார்டுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 14 ஆயிரம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் சிலர் ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவதில்லை. இதனால் ஒதுக்கீடு செய்யப்படும் அரிசியில் குறிப்பிட்ட அளவு இருப்பு இருக்கும்.

இவ்வாறு பொதுமக்கள் வாங்காமல் இருப்பு இருக்கும் ரேஷன் அரிசிதான் மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து ஒரு மாதம் எவ்வளவு அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோ அதே அளவுஅரிசி தான் அடுத்த மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் அரிசி ஒதுக்கீடு அளவு குறைந்தது. இதன்காரணமாக சிலர் அரிசி வாங்க முடியாதநிலை ஏற்பட்டது.

மேலும் புதிதாக வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன்கடைக்கு சென்றால் அவர்களுக்கு அரிசி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று விற்பனையாளர்கள் கூறி அனுப்பும் நிலைஇருந்தது. இந்த நிலையை மாற்ற வேலூர் மாவட்ட ரேஷன்கடைகளுக்கு கூடுதலாக அரிசி ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி வழக்கமாக ஒதுக்கீடு செய்யப்படும் 14 ஆயிரம் டன் அரிசியுடன் இந்த மாதம் கூடுதலாக 800 டன் அரிசி வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிதாக ரேஷன்கார்டுகள் பெற்ற பொதுமக்களுக்கும் இந்த மாதம் முதல் அரிசி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.