மாவட்ட செய்திகள்
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வேட்டவலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு வழிப்பாதையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேட்டவலம்,


திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் வாகனப் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் வேட்டவலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைப் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, திருவண்ணாமலை போக்குவரத்துப் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெ.மணிமாறன், வேட்டவலம் இன்ஸ்பெக்டர் மனோன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேட்டவலம் கடைவீதிபகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மீது அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் தாங்களாகவே அகற்ற முன்வர வேண்டும். சரக்கு ஆட்டோக்களில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சாலையோரம் நிறுத்தி விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். திருக்கோவிலூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள், பஸ் நிலையத்துக்குச் சென்று திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி வேட்டவலம் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பால் ஸ்டோர் பஸ் நிறுத்தம் முதல், பஸ் நிலையம் வரை வாகனங்களை ஒருவழிப்பாதையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் உள்ளே சென்று வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது வேட்டவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயவேல், கிருஷ்ணமூர்த்தி, தனிப்பிரிவு போலீஸ்காரர் கோட்டீஸ்வரன், போலீசார் கார்த்திகேயன், முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.