மாவட்ட செய்திகள்
மீனவ கிராமங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கோட்டக்குப்பம், மரக்காணம் பகுதி மீனவ கிராமங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
வானூர், 


2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியதில் தமிழகம், புதுச் சேரியில் உள்ள கடலோர கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து சுனாமி அச்ச உணர்வுடன் கடற்கரையோர மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுனாமி மற்றும் பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மரக்காணம் அருகே மண்டவாய்புதுக்குப்பம் மற்றும் கோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் மீனவ கிராமங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியை தத்ரூபமாக நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இதனால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் வரும் வரையில் கிராம எல்லையில் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.

மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வந்தவுடன் அவரது முன்னிலையில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் வாகனம், பேரிடர் தடுப்பு குழுவினர் ஆகியோர் தங்களது வாகனத்தின் சுழல் விளக்குகளை அதிவேகமாக ஒளித்தபடி மீனவ கிராமங்களில் புகுந்து சுனாமி, சுனாமி என்று எச்சரிக்கை செய்தனர்.

இதை சற்றும் எதிர்பாராத மீனவர்கள் சுனாமி, சுனாமி என்று கூறிக்கொண்டு தங்களது வீடுகளை விட்டுவிட்டு குடும்பத்துடன் ஓடி கிராமத்தின் மேற்கு பகுதியில் இருந்த இயற்கை பேரிடர் மையத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது அங்கு விரைந்து வந்த மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், அங்கிருந்த மீனவர்களிடம் ‘நீங்கள் பயப்பட வேண்டாம். இது சுனாமி குறித்த பாதுகாப்பு ஒத்திகை’ என்று கூறினர். இதன்பின்னர் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தொடர்ந்து பேரிடர் காலத்தின்போது பாதிக்கப்படுபவர்களுக்கு எப்படி முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். சுனாமியில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீணைப்புத்துறையினர் பயிற்சி அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலச்சந்திரன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் திருமுருகன், திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யா, வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணராஜன், மரக்காணம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜீ, தாசில்தார் தனலட்சுமி, மண்டல துணை தாசில்தார் அசோக் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் மீனவர் கிராமத்திலும் கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் சுனாமி மற்றும் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கடலில் சுனாமி ஏற்படும்போது மீனவர்களை மீட்பது, காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, கட்டிடங்களின் மீது இருப்பவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரியா, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, வானூர் தாசில்தார் ஜோதிவேல், கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.