மாவட்ட செய்திகள்
இளம்பெண் கற்பழிப்பு புகார் கொடுத்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

வீரபாண்டியில், இளம்பெண் கற்பழிப்பு புகார் கொடுத்ததால் எறும்பு பவுடரை தின்று வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.
உப்புக்கோட்டை, 


வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வசிப்பவர் பாலமுருகன் (வயது 21). இவருக்கும், 18 வயது இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த 5 மாதங்களாக அவர்கள் காதலித்து வந்ததாக தெரிகிறது.

அப்போது திருமண செய்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த இளம்பெண்ணை பாலமுருகன் கற்பழித்ததாக தெரிகிறது. இதற்கிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால் பாலமுருகன் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்தார்.

இதனால் அந்த இளம்பெண் மனமுடைந்து காணப்பட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண் இதுகுறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து அறிந்த பாலமுருகன், போலீசார் கைது செய்து விடுவார்கள் என கருதி எறும்பு பவுடரை (விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.