குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

உல்லியக்குடியில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-09-06 22:45 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உல்லியக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப் பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரியார் நகரில் உள்ள மின்மாற்றி பழுதானதால் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மும்முனை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் கிராமமக்கள் வெகு தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வந்தனர். இதுகுறித்து கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தனர். ஆனால் இதுநாள் வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி உல்லியக்குடி-சுத்தமல்லி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சுத்தமல்லி மின்வாரிய பொறி யாளர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக மின்மாற்றி சீரமைத்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் உல்லியக்குடி- சுத்தமல்லி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்