மாவட்ட செய்திகள்
குறைந்த விலைக்கு வீட்டுமனை, பணம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது

தாம்பரம் பகுதிகளில் குறைந்த விலைக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி பெண் உள்பட பலரிடம் பணம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தாம்பரம்,

சென்னை தாம்பரம் முடிச்சூர் சாலையில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருபவர் கவுரிசங்கர்(வயது 35). இவரிடம் சென்னையை அடுத்த அய்யப்பன் தாங்கலை சேர்ந்த மாலதி (48) கடந்த 2017-ம் ஆண்டு செங்கல்பட்டு செட்டிபுண்ணியம், மாங்காடு கோவூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் குறைந்த விலையில் நிலம் வாங்க 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிய கவுரி சங்கர் நிலத்தை பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். பணத்தை திருப்பி கேட்டும் தராததால் மாலதி இதுகுறித்து தாம்பரம் போலீசில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கவுரிசங்கரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கவுரி சங்கர் குறைந்த விலைக்கு நிலம் தருவதாக கூறி பலரை ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக சிங்கபெருமாள் கோவிலை சேர்ந்த ராணி, குரோம்பேட்டையை சேர்ந்த நாராயணன், இரும்புலியூரை சேர்ந்த விஜய், முடிச்சூரை சேர்ந்த சந்தானலட்சுமி ஆகியோரும் தங்களுக்கு நிலம் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்தனர்.

பலரிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் வாங்கி நிலம் தராமல் ஏமாற்றிய ரியல் எஸ்டேட் அதிபர் கவுரி சங்கரை போலீசார் கைது செய்து அவரிடம் கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.