3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-06 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் 3 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் கருணாநிதி, பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீட் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு போன்ற பயிற்சிகளுக்கு முதுநிலை ஆசிரியர்களை பயன்படுத்துவதில் இருந்து அரசு விலக்கு அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான 2-வது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 9 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களையும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கழகத்தின் பெரம்பலூர் கல்வி மாவட்ட தலைவர் காமராஜ், மகளிர் பிரிவு செயலாளர் எழிலரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கபேரியல் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜெயராமன், மல்லிகேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்