மாவட்ட செய்திகள்
செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுதா(28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 7 வயதில் லோகிதா என்ற மகள் இருக்கிறாள். அவள், அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சுரேசுக்கும், சுதாவுக்கும் முன்கோபம் அதிகம் என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என தெரிகிறது. சுரேஷூக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சுரேஷ், குடிபோதையில் வீட்டுக்கு சென்றார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சுதா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதை பார்த்த சுரேஷ், தனது மனைவி தூக்கில் தொங்கிய அதே கயிற்றின் மறுமுனையில் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது தாய்-தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியாமல் அவர்களுடைய மகள், வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

நேற்று காலை 9 மணி வரை சுதா வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் கதவை திறந்து வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.