திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2018-09-06 21:30 GMT
திண்டுக்கல், 


திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தை ரூ.5½ கோடியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சேலம், கரூர் பஸ்கள் வெளியேறும் பகுதி மூடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் கட்டிடம் கட்டப்படுகிறது. இதனால் அந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், பழனி பஸ்கள் வெளியேறும் பாதை வழியாக வெளியேறுகின்றன.

அதேநேரம் பழனி, சேலம், கரூர் பஸ்கள் அனைத்தும் ஏ.எம்.சி. சாலை, ஸ்கீம் சாலை வழியாக பஸ்நிலையத்துக்குள் வருகின்றன. ஆனால், ஸ்கீம் சாலையின் ஓரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏ.எம்.சி.சாலையில் இருந்து ஸ்கீம் சாலைக்கு திரும்பும் இடத்தில் நெரிசல் அதிகரித்து விட்டது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து ஸ்கீம் சாலையின் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக பொக்லைன் எந்திரத்துடன் நேற்று அந்த பகுதிக்கு அதிகாரிகள் வந்தனர். அதை பார்த்ததும் பலர் தங்களுடைய கடைகளுக்கு முன்பு அமைந்துள்ள கூரைகளை பிடுங்கி எடுத்தனர். ஆனால், பல கடைகளின் முன்பு சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து சுவர்கள் கட்டப்பட்டு இருந்தன. இதையடுத்து அந்த சுவர்களை பொக்லைன் எந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்த விளம்பர பலகைகள், பெட்டிகளை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரம் ஸ்கீம் சாலையில் இன்னும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. அவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்