அரசு பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

திருக்கோவிலூர் அருகே அரசு பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-06 22:00 GMT
திருக்கோவிலூர், 


திருக்கோவிலூரில் இருந்து மேல்வாலை கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. விழுப்புரம்-திருவண்ணாமலை செல்லும் தடம் எண்-215 அரசு பஸ்சும் மேல்வாலை கிராமத்தில் நிற்காமல் சென்றது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். இது பற்றி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 100 பேர் நேற்று முன்தினம் ஒன்று திரண்டு திருவண்ணாமலை -விழுப்புரம் சாலையில் மேல்வாலை கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இது பற்றி தகவல் அறிந்ததும் கண்டாச்சிபுரம் மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் மற்றும் கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மண்டல துணை தாசில்தார் பாலமருகன், அரசு பஸ் இயக்கவும், மேல்வாலை கிராமத்தில் பஸ் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்