மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் 13-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் மீன்கள் விலை கடும் உயர்வு

தஞ்சை மாவட்டத்தில் 13-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய மீனவ கிராமங்களில் சுமார் 301 விசைப்படகுகள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகளுக்கு மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய 2 இடங்களில் மட்டும் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இதில் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் மட்டும் 90 விசைப்படகுகளும் மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் 211 விசைப்படகுகளும் உள்ளன.

விசைப்படகு மீனவர்கள் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதாக கூறி கடந்த 23-ந் தேதி மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுகளை ஆய்வு செய்தனர். அப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை ஆய்வு செய்வது முறையில்லை என்றும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் போது தவறு நடந்தால் நீங்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுகிறோம் என விசைப்படகு மீனவர்கள் கூறினர். இதை ஏற்று அதிகாரிகள் சென்றுவிட்டனர். ஆனால் வழக்கம்போல கடந்த மாதம் 25-ந் தேதி கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தமான போது சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த 5 விசைப்படகு மீனவர்கள் மீது இரட்டைமடிவலை பயன்படுத்தியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறி அனுமதி டோக்கன் மற்றும் மானிய டீசல் வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்த நடவடிக்கையை ரத்து செய்யும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்தனர். இதன்படி கடந்த மாதம் 25-ந் தேதி முதல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 13-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. சேதுபாவாசத்திரம் விசைப்படகு மீனவர்களுக்கு ஆதரவாக மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மீனவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தால் மீனவர்களின் விசைப்படகுகள் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் கட்டுமாவடி, சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள மீன் ஏலக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. நாட்டுப்படகுகள் மூலம் பிடித்து வரப்படும் மீன்களையும் வெளியூர் மீன் வியாபாரிகள் வாங்கி புதுக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, பேராவூரணி போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதால் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதைப்போல நண்டு, இறால் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட காலா மீன் தற்போது ரூ.600-க்கும், கிலோ ரூ.250-க்கு விற்கப்பட்ட வாவல் மீன் ரூ.600-க்கும், ரூ.150-க்கு விற்கப்பட்ட பொடி மீன் ரூ.450-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ இறால் ரூ.650-க்கும், ஒரு கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்ட நெத்திலி கருவாடு ரூ.400-க்கும், ரூ.200-க்கு விற்கப்பட்ட காலா கருவாடு ரூ.500-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட பொடிதட்டைக்காரன் கருவாடு ரூ.180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.