ஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் காட்டெருமை நடமாட்டம்

ஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் காட்டெருமை ஒன்று நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Update: 2018-09-06 21:45 GMT
ஊட்டி,


நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தா, கேர்ன்ஹில், தொட்டபெட்டா உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டெருமை, கடமான், புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்படுவதாலும், வனப்பகுதியில் உணவு கிடைக்காததாலும் அங்கிருந்து வெளியேறி காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊட்டி நகரில் உலா வர தொடங்கியுள்ளன. குறிப்பாக காட்டெருமை நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.

கடந்த 3-ந் தேதி ஊட்டி நகரின் மையப்பகுதியான காபிஹவுஸ் ரவுண்டானா பகுதியில் காட்டெருமை ஒன்று உலா வந்ததுடன், பழைய அக்ரஹாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பகல் முழுவதும் அதே பகுதியில் இருந்த காட்டெருமையை இரவில் 2 மணி நேரம் போராடி தாவரவியல் பூங்காவின் மேல்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி-கோத்தகிரி சாலை கோடப்பமந்து ஆரணி ஹவுஸ் பகுதியில் காட்டெருமை ஒன்று சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து வனச்சரகர் முத்துகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கிடையே ஆரணி ஹவுஸ் பகுதியில் கேரட் தோட்டத்துக்குள் புகுந்த காட்டெருமை அங்கு வளர்ந்திருந்த புற்களை மேய்ந்தது. பின்னர் ஒரு வீட்டின் வளாகத்தில் புற்கள் அதிகமாக வளர்ந்து இருப்பதை கண்ட காட்டெருமை சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தது. அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்த புற்களையும் மேய்ந்த காட்டெருமை புதருக்கு அடியில் படுத்து ஓய்வு எடுத்தது. இதையடுத்து காட்டெருமைக்கு உணவாக கேரட்டுகளை வனத்துறையினர் கொண்டு வந்து புல்வெளியில் கொட்டினர். மேலும் காட்டெருமை குடிக்க வாளியில் தண்ணீர் வைக்கப்பட்டது. அந்த காட்டெருமையை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பழைய அக்ரஹாரம் பகுதியில் உலா வந்த அதே காட்டெருமை மீண்டும் ஆரணி ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் நுழைந்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு பகுதிகளில் ஒற்றை காட்டெருமை அடிக்கடி உலா வந்து கொண்டு இருக்கிறது. காட்டெருமையை பார்த்ததும் மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் ஊட்டியில் காட்டெருமை நடமாட்டத்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்