கோத்தகிரி அருகே அரசு பஸ் மீது சுற்றுலா வேன் மோதி விபத்து

கோத்தகிரி அருகே அரசு பஸ் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-09-06 22:00 GMT
கோத்தகிரி, 


கோத்தகிரி அருகே உள்ள கடசோலையில் இருந்து கோத்தகிரி நோக்கி நேற்று காலை 8 மணியளவில் ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 70 பயணிகள் இருந்தனர். பஸ்சை ஈஸ்வரன்(வயது 48) என்பவர் ஓட்டி வந்தார். வார்விக் அருகே திடீரென எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. உடனே டிரைவர் ஈஸ்வரன் பஸ்சை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பஸ் மற்றும் வேனின் கண்ணாடிகள் உடைந்தன.

இந்த விபத்தில் சுற்றுலா வேனை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ்(41) மற்றும் அதில் பயணம் செய்த தனலட்சுமி(60), சேகர்(60), விமலா(38), சந்தோஷ்(25), உதயகுமார்(27), கல்பனா(28), ராதா(33), சசிகுமார்(24), சிவரஞ்சன்(13), மகேஸ்வரி(46), பிரியா(24), பாலமுருகன்(11), சங்கவி(18), கந்தசாமி(25) உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களில் டிரைவர் நாகராஜை தவிர மற்றவர்கள் கோடநாடு பகுதியில் இருந்து அரசு பஸ்சில் கோத்தகிரிக்கு வந்துள்ளனர். நடுவழியில் பஸ் பழுதாகியதால் சுற்றுலா வேனில் ஏறி கோத்தகிரி வந்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்