அளேசீபம் துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி டாக்டர்களை நியமிக்க வேண்டும் கிராமமக்கள் மனு

அளேசீபம் துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2018-09-06 22:45 GMT
கிருஷ்ணகிரி,

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட கவுன்சில் துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சூளகிரி தாலுகா அளேசீபம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- அளேசீபம் கிராமம் தர்மபுரி - ஓசூர் மெயின் ரோட்டில் ராயகோட்டையிலிருந்து 11 கிலோ மீட்டரிலும், ஓசூரில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள கொடகாரப்பள்ளி, வரதராஜபுரம், மாமரத்துப்பட்டி, பூவரசம்பட்டி, நடராலப்பள்ளி, பண்டப்பள்ளி, பாலேபுரம், கொத்தூர், மெட்டரை, கரடிகுட்டை ஆகிய கிராமங்களில் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் ஒரு நர்சு மட்டும் பணியாற்றி வருகிறார். டாக்டர்கள் வருவதில்லை. இதனால் இங்குள்ளவர்கள் பல்வேறு நோய்கள், பிரசவம், விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்கு ராயக்கோட்டை அல்லது ஓசூர் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இங்குள்ள துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி நிரந்தரமாக டாக்டர்களை நியமித்து, அவசரகால ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நவீன்குமார், ஊர்கவுண்டர் நாராயணன் மற்றும் முரளி உட்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்