மாவட்ட செய்திகள்
கரடு புறம்போக்கு நிலத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரிடம் விசாரணை

கரடு புறம்போக்கு நிலத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை தாசில்தார் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மிட்டாதின்னஅள்ளி மற்றும் நல்லசேனஅள்ளி ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதியில் எட்டியானூர் கரடு புறம்போக்கு மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் இருந்து மழைக்காலங்களில் வரும் தண்ணீர் விவசாய நிலங்கள், ஏரிகள் நீர்நிலைகளுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகின்றது. இந்த கரடு புறம்போக்கு மலைப்பகுதிகளில் உள்ள மண் உள்ளிட்ட கனிம வளங்களை உடைத்தும், அள்ளியும் மர்ம நபர்கள் கடத்தி வந்தனர்.

இந்த கனிமவள கொள்ளை குறித்து பொதுமக்கள் நேற்று, தர்மபுரி கலெக்டர் மலர்விழிக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில், தாசில்தார் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது மலை கரடு புறம்போக்கு நிலத்தில் உள்ள பாறைகளை 4 பேர் உடைத்து கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் அங்கு சென்ற போது 4 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் துரத்தி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளிகளான முருகன் (வயது32), கணேசன் (40), முனிராஜ் (45), ராஜ்குமார் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் 4 பேரையும் அதியமான்கோட்டை போலீசில் தாசில்தார் ஒப்படைத்தார். இதுதொடர்பாக நூலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சங்கர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கற்களை உடைக்க பயன்படுத்திய கடப்பாறை, சுத்தி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.