புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கில் திருப்பம்: டிரைவரை தாக்கி லாரியை கடத்தியது அம்பலம் போலீசில் சரண்

புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக சேலம் வியாபாரி தொப்பூர் போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2018-09-06 22:15 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் போலீசார் கடந்த 2-ந்தேதி பெங்களூருவில் இருந்து கோவைக்கு லாரியில் கடத்திய ரூ.20 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கோவை அலுமின்காலனியை சேர்ந்த மன்சூர் அலி (வயது 33), மரக்கடையை சேர்ந்த முகமது அலி (36), அப்பாஸ் (35), உக்கடத்தை சேர்ந்த முகமது ஹரிப் (28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக புகையிலை பொருட்கள் மொத்த வியாபாரியான சேலத்தை சேர்ந்த உத்தம்சிங் (27) என்பவர் தொப்பூர் போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-

சேலத்தை சேர்ந்த புகையிலை மொத்த வியாபாரி உத்தம்சிங் (27) என்பவர் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து அதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து சுற்று வட்டார பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு அதேபகுதியை சேர்ந்த சிவபெருமாள் என்பவருடைய லாரியில் பெங்களூருவில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் டிரைவர் ஆனந்தகுமார் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

தொப்பூர் கணவாய் பகுதியில் முகமது அலி உள்ளிட்ட கும்பல் லாரியை வழிமறித்து டிரைவர் ஆனந்தகுமாரை தாக்கி விட்டு புகையிலை பொருட்களுடன் லாரியை கடத்தி சென்றதும், டிரைவர் ஆனந்தகுமார் நடந்த சம்பவம் குறித்து லாரி உரிமையாளர் மற்றும் உத்தம்சிங் ஆகியோருக்கு தகவல் தெரிவித்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக லாரி உரிமையாளர் சிவபெருமாள், டிரைவர் ஆனந்தகுமார் மற்றும் கைது செய்யப்பட்ட 4 பேர் ஆகிய 6 பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். விசாரணையின் முடிவில் புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்