ஓட்டல் அதிபர் கொலை வழக்கு: கூலிப்படை கும்பல் தலைவன் உள்பட 5 பேர் கைது

சேலம் ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் கூலிப்படை கும்பல் தலைவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-06 22:15 GMT
சேலம்,

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபி(வயது 49). இவர் வீட்டின் கீழ்பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த மாதம் 14-ந் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமானார். பின்னர் திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள காவிரி ஆற்றில் கோபி பிணமாக மீட்கப்பட்டார். மேலும் அவர் மாயமான நாளில் அவருடைய நண்பர் பெரியகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்த திருமணிகண்டன்(36) என்பவரையும் காணவில்லை. அவர் பிடிபட்டால் தான் கோபி கொலைக்கான காரணங்கள் தெரியவரும் என்பதால், அவரை அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலம் டவுன் வருவாய் ஆய்வாளரிடம் திருமணிகண்டன் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கோபி, திருமணிகண்டன், பொன்னம்மாபேட்டையை சேர்ந்த கட்டிட என்ஜினீயர் வினோத்குமார் (33) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். கோபியின் மனைவியுடன் வினோத்குமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2013-ம் ஆண்டு அவரை கோபி, திருமணிகண்டன் ஆகியோர் கூலிப்படைக்கு ரூ.3 லட்சம் கொடுத்து கொலை செய்தனர்.

இந்த கொலையில் கூலிப்படை தலைவனான பொன்னம்மாபேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் உள்பட சிலர் ஈடுபட்டனர். இந்த நிலையில் சதீஷ்குமார், கோபியிடம் இருந்து ரூ.50 லட்சம் வாங்கி கொடுக்குமாறு திருமணிகண்டனிடம் கூறினார். இல்லையெனில் வினோத்குமார் கொலை தொடர்பாக போலீசாரிடம் தெரிவித்து உங்களை காட்டி கொடுத்து விடுவேன் என்று கூறி அவர் மிரட்டினார்.

இதையடுத்து திருமணிகண்டன் ஓட்டல் அதிபர் கோபியிடம் பணம் கேட்டார். இந்த பணத்தை அவர் கொடுக்காததால், அவரை திருமணிகண்டன், ஏழுமலை ஆகியோர் சேர்ந்து கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி கொன்றனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து திருமணிகண்டன், ஏழுமலை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் நேற்று இரவு கூலிப்படை கும்பல் தலைவன் சதீஷ்குமார்(35), கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்(30), பூபாலன்(35), மணிகண்டன்(23), தங்கராஜ்(28) ஆகிய 5 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்தார். இந்த கும்பலுக்கு வேறு கொலையில் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்