சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குறிப்பிட்ட நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குறிப்பிட்ட நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-09-06 22:30 GMT

சேலம்,

நாடு முழுவதும் வருகிற 13–ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினர் தங்களது பகுதியில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். அவ்வாறு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து அந்தந்த பகுதியில் உள்ள நீர்சிலைகளை கரைப்படுவது வழக்கம்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை கரைக்கச் செல்பவர்கள் சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாப்பேட்டை ஏரி, சீலநாயக்கன்பட்டி ஏரி மற்றும் எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆறு மற்றும் மேட்டூர் காவிரி ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் குறிப்பிட்ட நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்