காங். முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

இந்து கடவுள் கிருஷ்ணர் பற்றி தவறான கருத்து பதிவிட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் பா.ஜனதா கட்சியினர் புகார் மனு அளித்தனர்.

Update: 2018-09-06 22:30 GMT
கோவை,



பா.ஜனதா இளைஞர் அணியின் அகில இந்திய துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் நேற்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கமிஷனர் பெரியய்யாவிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

இமாச்சல பிரதேச மாநிலம் காங்கரா மாவட்டம் ஜாவல் சட்டமன்ற தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நீரஜ் பாரதி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்து கடவுள் கிருஷ்ணர் மற்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்கள் மற்றும் படங்களை பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்துக்களை மட்டுமல்லாமல் பெண்களையும் இழிவுபடுத்தியுள்ளன. மத்தியில் முன்பு பாராளுமன்ற காங்கிரஸ் முதன்மை செயலாளர் என்ற உயர்ந்த பதவி வகித்த அவர் தெரிவித்த கருத்து கடும் குற்றத்துக்கு சமமாகும்.

இந்துக்களின் மத நம்பிக்கையை உடைத்தெறியும் அவரது கருத்துக்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வரும் வேளையில் அவர் தெரிவித்துள்ள கருத்து இந்துக்களை வெகுவாக பாதித்துள்ளது. சமூக வலைதளங்களில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பவர்களால் நாட்டில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முன்னாள் காங். எம்.எல்.ஏ. நீரஜ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது பா.ஜனதா இளைஞர் அணி மாவட்ட தலைவர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் சந்திர சேகர், சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்