நேரடி நெல் விதைப்பு திட்டத்திற்கு ரூ.10 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு

மாவட்டத்திற்கு நேரடி நெல் விதைப்பு திட்டத்தின் கீழ் நடப்பாண்டிற்கு ரூ.10 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

Update: 2018-09-06 22:15 GMT
சிவகங்கை, 

கல்லல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக அவர் கல்லல் ஊராட்சி ஒன்றியம் சிராவயல் ஊராட்சிக்குட்பட்ட கிளமேடு கிராமத்தில் முன்னோடி விவசாயி வேளாண்மைத் துறையின் சார்பில் முழு மானியத்தில், தெளிப்பான் நீர் பாசன விவசாயப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், அரண்மனை சிறுவயல் ஊராட்சியில் மானாவாரி விவசாயத்தில் நேரடி நெல் விதைப்பு பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.

பின்னர் நாச்சியாபுரம் ஊராட்சியில் முன்னோடி விவசாயி மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதையும், தொடர்ந்து கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் 40 சதவீதம் மானிய திட்டத்தில் ரூ.3 லட்சத்து 67ஆயிரம் மதிப்பீட்டில் மினி டிராக்டர் மற்றும் பவர் டிரில்லர் வண்டிகளை கலெக்டர் வழங்கினார்.

இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:- வேளாண்மைத் துறை மூலம் மாவட்டத்திற்கு 2018-19-ம் ஆண்டிற்குரிய தெளிப்பான் நீர் பாசன திட்டம் செயல்படுத்துவதற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு பெற்று விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் மூலம் குறைந்தளவு தண்ணீரில் ஆண்டுக்கு 3 முறை எளிதாக விவசாய பணிகளை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். எனவே மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் இதை கட்டாயம் பயன்படுத்தலாம்.

மேலும் நேரடி நெல் விதைப்பு திட்டத்தின் கீழ் நடப்பாண்டிற்கு ரூ.10 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1500 உதவித்தொகை வழங்கி நேரடி நெல் விதைப்பு முறையை செயல்படுத்தலாம். மேலும் நேரடி நெல் விதைப்பிற்கு பயன்படுத்தும் எந்திரத்திற்குரிய கட்டணமாக ரூ.1500 ஒரு ஹெக்டேருக்கு அரசே வழங்கி வருகிறது. எனவே விவசாயிகள் இந்த திட்டத்தின் பயன்கள் குறித்தும், அதன் மூலம் கிடைக்கும் லாபங்கள் குறித்து வேளாண்மை அலுவலர்களிடம் ஆலோசனை மற்றும் பயிற்சி பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்