பவானிசாகர் அணையின் உயரம் 105 அடியாக பொதுப்பணித்துறை ஆவணங்களில் பதிவு

பவானிசாகர் அணையின் உயரம் 105 அடியாக பொதுப்பணித்துறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் சி.கதிரவன் அறிவித்தார்.

Update: 2018-09-07 00:11 GMT
ஈரோடு, 


ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இங்கிருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும்.

ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை என்ற சிறப்பு பெற்ற பவானிசாகர் அணையின் உயரம் 120 அடி என்று கூறப்பட்டு வந்தது. பின்னர் அதில் 15 அடியை சேறு- சகதி என கழித்து 105 அடியாக கணக்கிட்டு வந்தனர். இதனால் பவானிசாகர் அணையின் உயரம் 120 அடியா? 105 அடியா? என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்தநிலையில் இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பவானிசாகர் அணையின் உயரம் குறித்த விவாதம் நடந்தது.
அதைத்தொடர்ந்து, பவானிசாகர் அணையின் உயரம் தொடர்பான விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பவானிசாகர் அணையில் கால்வாய் மதகுகள், ஆற்று மதகுகள் மற்றும் உபரிநீர் வெளியேற்றும் மதகுகள் அமைந்து உள்ளன. பொதுவாக அணையின் உயரம் என்பது அணைக்கட்டில் அமைந்து உள்ள கீழ்நிலை மதகின் அடிமட்டத்தில் இருந்து அணையில் அதிகப்படியாக நீர் தேக்கப்படும் உயர அளவுதான் அணையின் உயரமாக கணக்கிடப்படும். அதன்படி பவானிசாகர் அணையில் உள்ள ஆற்று மதகுதான் கீழ்நிலையில் இருக்கும் மதகாக உள்ளது. எனவே அதிகபட்சமாக நீர் தேக்கப்படும் உயரத்தில் இருந்து ஆற்று மதகின் அடிமட்ட உயர அளவினை கழித்து பவானிசாகர் அணையின் உயரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பவானிசாகர் அணையின் உயரம் 105 அடியாகும்.

அதாவது கடல்மட்டத்தில் இருந்து பவானிசாகர் அணையின் ஆற்று மதகின் உயரம் 815 அடி. அதிக பட்சம் நீர் தேக்கப்படும் உயரம் 920 அடி. 920 அடியில் இருந்து 815 அடியை கழித்தால் 105 அடி கிடைக்கிறது. இதுவே பவானிசாகர் அணையின் உயரமாகும். பவானிசாகர் அணையின் உயரம் 105 அடி என பொதுப்பணித்துறை ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு பவானிசாகர் அணையின் உயரம் குறித்து அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்