மாவட்ட செய்திகள்
செங்கோட்டை வழியாக பஸ்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ரே‌ஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

செங்கோட்டை வழியாக அரசு பஸ்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ரே‌ஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செங்கோட்டை, செங்கோட்டை வழியாக அரசு பஸ்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ரே‌ஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ரே‌ஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக அரசு பஸ்களில் கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் செங்கோட்டை சிவில் சப்ளை தாசில்தார் அழகப்ப ராஜா தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், முத்துக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் நேற்று செங்கோட்டை பஸ்நிலையத்துக்கு வந்தனர்.அப்போது தென்காசியில் இருந்து செங்கோட்டைக்கு வந்து, கேரளாவுக்கு செல்ல இருந்த தமிழக அரசு பஸ்சில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கேரளாவுக்கு கடத்துவதற்காக பயணிகளின் இருக்கைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரே‌ஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர் மேலும் கேரளாவுக்கு புறப்பட இருந்த மற்றொரு கேரள அரசு பஸ்சிலும், பயணிகள் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரே‌ஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் சோதனை நடத்துவதை கண்டதும் அரிசி கடத்தல்காரர்கள் உரிமை கோராமல் தெரியாதவர்கள் போன்று இருந்து விட்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் ஆட்டோவில் ஏற்றி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்துவது தற்போது அதிகமாகி வருவதால் அதிகாரிகள் தினமும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ரே‌ஷன் அரிசி கடத்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக ஈடுபடுவதாக கூறப்படுகிறது.