மாவட்ட செய்திகள்
தேவகோட்டை பகுதியில் குடிமராமத்து என்ற பெயரில் கண்மாய்களில் மணல் திருட்டு, விவசாயிகள் குற்றச்சாட்டு

தேவகோட்டை பகுதியில் குடிமராமத்து என்ற பெயரில் விதிமுறைகளை மீறி கண்மாய்களில் மணல் திருட்டு நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவகோட்டை, தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின்கீழ் கிராமப்புற தேவைகளுக்காக கண்மாய்களில் மண் அள்ளிக்கொள்ள உத்தரவிட்டிருந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி சில மணல் திருடும் கும்பல்கள் கண்மாய்களில் மண் எடுக்கிறேன் என்கின்ற போர்வையில் விதிமுறைகளை மீறி ஆழமாக தோண்டி மணலை திருடி வருகின்றனர். கண்மாய்களில் 10 முதல் 15 அடி அளவிற்கு பள்ளங்களாக தோண்டி மணல் எடுத்து வருகின்றனர். இதனால் கண்மாய் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதனை தடுக்க வேண்டும் என்று பலமுலை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.தேவகோட்டை பகுதியில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மராமத்து செய்யப்பட்டதாகவும், அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் மராமத்து செய்யப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு சில கண்மாய்கள் வெட்டப்பட்டன. ஆனால் பெரும்பாலான கண்மாய்கள் அப்படியே தூர்வாரப்படாமல் அப்படியே உள்ளது. இந்த கண்மாய்களில் இருந்து ஆண்டுதோறும் மர ஏலம் விடப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசுக்கும், உள்ளாட்சி துறைக்கும் வருமானம் கிடைக்கிறது. ஆனால் அந்த பணத்தை பயன்படுத்தாமல், வருவாய் முழுவதுமே கண்மாய் தூர்வாரும் நோக்கத்திற்கு பயன்படாமல் போய்விட்டது என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்தநிலையில் தமிழக அரசு தற்போது குடிமராமத்து திட்டங்களை அறிவித்து இருந்த போதிலும், இதை இடைத்தரகர்கள் அந்த கண்மாய்களை விதிமுறையை மீறி வெட்டியதால் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. தற்போது கண்மாய்க்கு வரவேண்டிய தண்ணீர் முழுவதும் வராமல் ஆங்காங்கே தேங்கி பள்ளங்களில் நின்றுவிடுகிறது. எனவே இனிவரும் காலங்களில் தமிழக அரசு கண்மாயை ஆழப்படுத்தி வெட்டும்போது அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் வெட்ட வேண்டும் என்கிற ஒரு உறுதியான உத்தரவை அறிவித்து குடிமராமத்து திட்டத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கண்மாய்களை காப்பாற்ற முடியும். எனவே தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.