கல்பாக்கம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர் சாவு

கல்பாக்கம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-09-07 22:15 GMT
கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த பவுஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர். கடந்த 5-ந் தேதி கல்பாக்கம் அருகே கடலூர் கிராமம் மலையாந்தோப்பு பகுதியை சேர்ந்த விவசாயி சசிகுமார் என்பவரது மாட்டுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது.

இதையடுத்து சசிகுமார் தனது மாட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ராஜேந்திரனை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். சிகிச்சை முடிந்ததும் அவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பவுஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வழியில் கூவத்தூர் பஜாரில் வந்து கொண்டிருந்த போது எதிரே லாரி வந்து கொண்டிருந்தது. மோட்டார் சைக் கிளை ஓட்டி வந்த சசிகுமார் நிலைதடுமாறியதில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் ராஜேந்திரன் லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்