சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சீராக குடிநீர் வினியோகிக்க கோரி துறைமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-07 21:45 GMT
பெரம்பலூர், 


பெரம்பலூர் நகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதிக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். துறைமங்கலம் பகுதிக்கு குடிநீர் சீராக வினியோகிக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த துறைமங்கலம் பொதுமக்கள் நேற்று காலை 7.45 மணியளவில் பெரம்பலூர்-திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் வினோத் மற்றும் அதிகாரிகள், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நகராட்சி ஆணையர் வினோத் தற்காலிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பின்னர் குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இதனை தொடர்ந்து அந்தப்பகுதிக்கு தற்காலிகமாக உடனடியாக டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி துறைமங்கலம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்