மாவட்ட செய்திகள்
கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர், 


இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.

அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நடைபெற்றது. பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட கல்லூரி மாணவ- மாணவிகள் 1.1.2019-ம் நாளன்று நீங்கள் 18 வயது பூர்த்தியானவரா? இன்றே வாக்காளராக உங்கள் பெயரை பதிவு செய்வீர், எழுவீர், வாக்காளராக இன்றே பதிவு செய்வீர் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலம் சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாக புதிய நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் இருபாலர் கல்லூரி, சாரதா மகளிர் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.