கிராம சேவை மைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட ரெகுநாதபுரம் போலீஸ் நிலையம்

சொந்த கட்டிடம் இல்லாததால், கிராமசேவை மைய கட்டிடத்திற்கு ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்தித்தை மாற்றியதற்கு மகளிர் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2018-09-07 21:30 GMT
கறம்பக்குடி, 


புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் கடந்த 1998-ம் ஆண்டு போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளாக அங்குள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்திலேயே போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சண்முகம் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவி குழந்தைகளுடன் தான் வசிப்பதற்கு அந்த கட்டிடம் தேவைப்படுவதாக கூறி, போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்த கட்டிடத்தை காலி செய்ய கூறினார். ஆனால் ரெகுநாதபுரத்தில் போலீஸ் நிலையத்திற்கு யாரும் வாடகைக்கு கட்டிடம் தர முன்வரவரவிலை. இதனால் போலீஸ் நிலைய கட்டிடத்தை காலி செய்ய முடியாமல் போலீசார் தவித்து வந்தனர். இதற்கிடையே போலீஸ் நிலையம் செயல்பட்டு வரும், தனது கட்டிடத்தை காலி செய்ய போலீசார் மறுப்பதாக கூறியும், உடனடியாக கட்டிடத்தை காலி செய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சண்முகத்தின் மனைவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் கணேஷ், முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பி வந்தார்.

இதையடுத்து ரெகுநாதபுரத்தில் சண்முகத்தின் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த போலீஸ் நிலையத்தை காலி செய்து, அவரது மனைவியுடம் ஒப்படைக்கும் படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களை கூட்டி போச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீஸ் நிலையத்தை ரெகுநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு செயல்படாமல் உள்ள கிராம மைய கட்டிடத்திற்கு மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நேற்று கிராம சேவை கட்டிடத்திற்கு போலீஸ் நிலையம் மாற்றப்பட்டு, திறப்பு விழா நடந்தது. விழாவில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அய்யனார் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி, போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கிராம சேவை மைய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட தொடங்கியது.

இதற்கிடையே, கிராம சேவை மைய கட்டிடத்தை போலீஸ் நிலையத்திற்கு வழங்கியதற்கு மகளிர் குழுவினர், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மகளிர் குழுவினர் கூறுகையில், கிராமங்களுக்கும் இணையதள மற்றும் தொலை தொடர்பு, மின்னஞ்சல் சேவை கிடைக்க வேண்டும். அதனை மக்கள் இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கில் தான் கிராம பகுதியில் கிராம சேவை மையங்கள் தொடங்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட் டன. அதை மகளிர் சுயக்குழுவினரிடம் ஒப்படைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடாதது கண்டனத்திற்குரியது. என்றனர். 

மேலும் செய்திகள்