காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்

குர்லாவில் ரெயில்வே காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-09-07 23:02 GMT
மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ளது குர்லா ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையம் மெயின் மற்றும் துறைமுக வழித்தடங்களின் சந்திப்பு ரெயில் நிலையமாகவும் விளங்குகிறது. இதன் காரணமாக தினசரி குர்லா ரெயில் நிலையத்துக்கு லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

குர்லா ஹரியானாவாலா சந்து பகுதியில் குர்லா ரெயில் நிலைய காம்பவுண்டு சுவர் உள்ளது. இந்த சுவரின் ஒரு பகுதி அண்மை காலமாக ஒருபக்கமாக சாய்ந்தபடி இருந்து உள்ளது.

ஆனால் அந்த சுவரை இடித்து தள்ள ரெயில்வே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில், 20 அடி உயரம் கொண்ட அந்த காம்பவுண்டு சுவரின் ஒரு பகுதி நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விட்டது. இதில், அந்த காம்பவுண்டு அருகில் உள்ள பான் கடையில் நின்று கொண்டிருந்த அமீர் சேக், லகான் கடால், லட்சுமண் பாட்டீல், முகமது பன்டோஜி ஆகிய 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்கள் உதவி கேட்டு அலறினார்கள்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்கள் 4 பேரையும் மீட்டனர். அமிர் சேக்கிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 3 பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்