மாவட்ட செய்திகள்
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 12 இடங்களில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், 


இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் வீடுகளில் மட்டுமின்றி பொதுஇடங்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். பின்னர் ஒருசில நாட்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அதன்படி இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்கு, பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே விநாயகர் சிலைகளை தயாரிப்பது குறித்து கலெக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

களிமண், ரசாயனம் கலப்படம் செய்யாத கிழங்கு மாவு, ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படும்.
மேலும் நீரில் கரையும் தன்மையுள்ள மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வண்ணங்களை மட்டுமே சிலைகள் மீது பூச வேண்டும். ரசாயனம் கலந்த வண்ணங்கள் பூசப்பட்டு இருந்தால், சிலைகளை கரைக்க அனுமதி கிடையாது. அதேபோல் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

அதன்படி திண்டுக்கல் கோட்டைக்குளம், பழனி சண்முகநதி, நத்தம் அம்மன் குளம், நிலக்கோட்டை அணைப்பட்டி ஆறு, வத்தலக்குண்டு கண்ணாபட்டி ஆறு, விளாம்பட்டி வைகை ஆறு, ஒட்டன்சத்திரம் தலைக்குத்து ஆறு, கொடைக்கானல் டோபிகானா, வேடசந்தூர் குடகனாறு, வடமதுரை நரிப்பாறை, குஜிலியம்பாறை மெத்தப்பட்டி, கன்னிவாடி மச்சக்குளம் ஆகிய இடங்களில் சிலைகளை கரைக்கலாம்.
இந்த இடங்களில் ரசாயன வண்ணம் பூசாத விநாயகர் சிலைகளை கரைத்து, பாரம்பரிய முறைப்படி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கலெக்டர் கூறியிருக்கிறார்.