விழுப்புரத்தில் சீருடை பணியாளர் உடல்தகுதித்தேர்வு தொடங்கியது

விழுப்புரத்தில் சீருடை பணியாளர் உடல்தகுதித்தேர்வு தொடங்கியது. இதில் முதல் நாளில் 664 பேர் அடுத்த நிலைக்கு தகுதி பெற்றனர்.

Update: 2018-09-07 22:15 GMT
விழுப்புரம், 


தமிழ்நாடு காவல்துறையில் 5,538 2-ம் நிலை காவலர் பணியிடங்களும், சிறைத்துறையில் 340 சிறைக்காவலர் பணியிடங்களும், தீயணைப்புத்துறையில் 262 பணியிடங்களும் ஆக மொத்தம் 6,140 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எழுத்து தேர்வு நடைபெற்றது.
இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 16 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 434 பெண்கள் உள்பட 1,947 பேரும், கடலூர் மாவட்டத்தில் 376 பெண்கள் உள்பட 1,396 பேரும் என மொத்தம் விழுப்புரம் காவல் சரகத்தில் 810 பெண்கள் உள்பட 3,343 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


இவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. தேர்விற்கு பங்கேற்க வந்தவர்களை தவிர மற்ற யாரையும் மைதானத்திற்குள் வர அனுமதி அளிக்கப்படவில்லை.

முதல் நாளான நேற்று விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 1,000 ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவர்களில் 180 பேர் வரவில்லை. மீதமுள்ள 820 பேருக்கு உயரம் சரிபார்க்கப்பட்டது.

உயரம், மார்பளவு சரிபார்ப்பு

இதில் எம்.பி.சி,, பி.சி., ஓ.சி. வகுப்பினருக்கு உயரம் 170 செ.மீட்டரும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 168 செ.மீட்டரும் இருத்தல் வேண்டும். இதன் அடிப்படையில் உயரம் சரிபார்க்கப்பட்டதில் உயரம் குறைவாக இருந்ததாக 89 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக உயரம் சரிபார்த்தலில் தகுதி பெற்ற 731 பேருக்கு மார்பளவு சரிபார்த்தல் நடந்தது. இதில் அனைவருக்கும் சாதாரண நிலையில் 81 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 86 செ.மீட்டரும் இருத்தல் வேண்டும். இதன் அடிப்படையில் நடந்த தேர்வில் 9 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து உயரம், மார்பளவு சரிபார்த்தலில் தகுதி பெற்ற 722 பேருக்கு 1,500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இந்த இலக்கை 7 நிமிடத்திற்குள் அடைய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் இலக்கை நோக்கி ஆர்வமுடனும், உத்வேகத்துடனும் ஓடி குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை அடைந்தனர். சிலர் இலக்கை அடைய முடியாமல் வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில் 58 பேர் இலக்கை அடைய முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். குறித்த நேரத்திற்குள் இலக்கை அடைந்த 664 பேர் அடுத்த நிலையான வருகிற 12-ந் தேதி நடைபெறும் உடல்திறன் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

இந்த தேர்வை வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜன் பார்வையிட்டார். அப்போது உடல் தகுதித்தேர்வில் தகுதி பெறாமல் சோகத்துடன் வெளியேறிய சிலரிடம் ஐ.ஜி. நாகராஜன் நேரில் சென்று, உங்களுக்கு திறமை இருக்கிறது, மனதை தளரவிடாதீர்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

அப்போது விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) முகுந்தன், கடலூர் சிறைத்துறை கூடுதல் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வீமராஜ், நீதிராஜ், சரவணன் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.தொடர்ந்து, இன்றும் (சனிக்கிழமை) சீருடை பணியாளர் உடல் தகுதித்தேர்வு நடக்கிறது. 

மேலும் செய்திகள்