குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் - திருப்பூரில், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.

குட்கா ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று திருப்பூரில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-09-07 23:22 GMT
திருப்பூர்,

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் காங்கேயம் கிராஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது வரவேற்று பேசினார். கூட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி, காங்கேயம் எம்.எல்.ஏ. தனியரசு, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நீதித்துறை வரலாற்றில் சிறப்பு மிக்கது. ஏற்கனவே இவர்களை விடுவிக்க அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு இந்த தீர்ப்பு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தற்போது அதற்கான வாய்ப்பை கோர்ட்டு வழங்கியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்றுள்ள குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இதில் முதல்-அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். சமூக சிந்தனையுடைய எழுத்தாளர்கள் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. சமூக நீதி சிந்தனை, மனிதநேய சிந்தனை உள்ளவர்கள் சகிப்பு தன்மையுடன் செயல்படுகிறார்கள்.

பாசிச சிந்தனை உள்ளவர்கள் தான் சகிப்பு தன்மை இல்லாமல் முரட்டுத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. ஆனால் எல்லை மீறக்கூடாது என்பது எங்கள் கருத்து. அதே நேரத்தில் நாகரீகமான முறையில் கருத்து சொல்பவர்களை தடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது மக்களிடையே பூகம்பமாக வெடிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சோபியா என்ற மாணவியின் குரல் நாடு முழுக்க மத்திய அரசுக்கு எதிராக வீசிக்கொண்டிருக்கக்கூடிய மாபெரும் மவுன அலைகளின் சிறிய முனங்கல் சத்தம் மட்டுமே இது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் அவர் மீதான நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். நாட்டு மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்