ரெயில்வே சுரங்கப்பாதையில் மாணவர்கள் போராட்டம்

விருத்தாசலம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-07 22:00 GMT
விருத்தாசலம், 


விருத்தாசலம் அருகே உள்ளது செம்பளாக்குறிச்சி கிராமம். விருத்தாசலம்- மங்கலம்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்து தான் இந்த கிராமத்துக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே கேட் மூடப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

இந்த சுரங்கப்பாதை வழியாகத்தான் அரசு டவுன் பஸ்கள், மினிபஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் செம்பளாக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், இருசாளக்குப்பம், மாத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையால் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சுரங்கப்பாதையில் சுமார் 3 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மேலும் மழை பெய்தால் அவ்வழியாக முற்றிலும் போக்குவரத்து தடைபடும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் காரணமாக பொதுமக்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் இருசக்கர வாகனங்களில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தண்டவாளத்தை கடந்து விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இது சென்னை-திருச்சி ரெயில்வே பாதை என்பதால், இவ்வழியாக அடிக்கடி ரெயில்கள் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளி மற்றும் கல்லூரிக்கு புறப்பட்ட மாணவர்கள், சுரங்கப்பாதைக்குள் நின்று கொண்டு, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது அவர்கள், இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதில் இருந்து மழைக்காலங்களில் சுரங்கத்துக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்காமல் இருக்க ரெயில்வே நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதே நிலை நீடித்தால் மேற்கண்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு விரைவில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்