குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.70 கோடி செலவில் வராகி குடிநீர் திட்டம்

உடுப்பி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.70 கோடி செலவில் வராகி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Update: 2018-09-08 00:06 GMT
மங்களூரு,

உடுப்பி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிப் பணிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று உடுப்பி மாவட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா மேரி பிரான்சிஸ், எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி பட், ஹாலாடி சீனிவாச செட்டி, சுகுமார் செட்டி, சுனில் குமார், லாலாஜி மெண்டன், சீனிவாச பூஜாரி எம்.எல்.சி. மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உடுப்பி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி உள்ளேன். உடுப்பி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மட்டும் ரூ.141 கோடி அளவில் சேதம் ஏற்பட்டு இருப்பதாக முதல்கட்ட அறிக்கையில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதேபோல் மாநில அரசு சார்பில் உடுப்பி மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக ரூ.16 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சாலைகளை சீரமைக்க கோரி அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன. உடுப்பி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து முழுமையான அறிக்கையை மாவட்ட நிர்வாகம் இன்று(அதாவது நேற்று) வழங்கி உள்ளது. பெங்களூருவுக்கு சென்ற உடன் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி உடுப்பி மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.100 கோடி வழங்குவேன்.

ரேஷன் கார்டுகள் குளறுபடி குறித்தும் ஏராளமான புகார்கள் வருகின்றன. அதுபற்றியும் ஆலோசனை நடத்தி உள்ளேன். ரேஷன் கார்டுகள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்.

அரசு துறைகளில், ஊழியர்கள் பற்றாக்குறைைய போக்குவதற்காக மாவட்ட கலெக்டர்களே கூடுதலாக ஊழியர்களை நியமித்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உடுப்பி மாவட்டத்தில் முதல்கட்டமாக அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். ரூ.70 கோடி செலவில் வராகி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த உள்ளேன். அதன்மூலம் உடுப்பி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை களையப்படும்.

இளைஞர்களுகு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அக்டோபர் மாதத்திற்குள்(அடுத்த மாதம்)் 3,600 பயனாளிகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். சர்க்கரை தொழிற்சாலைகளை மேம்படுத்த விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட வேண்டும். மீனவர்கள் படகுகள் வாங்க நிதியுதவி வழங்கப்படும்.

குமாரசாமி தலைமையிலான ஆட்சி கூட்டணி ஆட்சி என்றும், எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளனர் என்றும் பா.ஜனதாவினர் ஏளனம் செய்து வருகிறார்கள். எங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்களிடம்தான் இருக்கிறார்கள்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். 

மேலும் செய்திகள்