மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்: பெண்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் கலெக்டர் ஷில்பா பேச்சு

பெண்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.

Update: 2018-09-08 22:30 GMT

பேட்டை,

பெண்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.

கருத்தரங்கம்

நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வ.உ.சிதம்பரனார் கலையரங்கத்தில் பெண் தொழில் முனைவோர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பெண் தொழில் முனைவோர் நலச்சங்க மாநில தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறு, குறு தொழில் முனைவோர் அதிகம் உள்ளனர். பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னேறி வருகிறது. பெண்களும் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்.

சர்வதேச அளவில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்வது இல்லை. ஏனென்றால் அங்கு அதிக அளவு மனித ஆற்றல் கிடையாது. இந்தியாவை பொறுத்த வரையில் மனித சக்திகள், தொழில்நுட்பம் அதிக அளவில் உள்ளன. இதனால் பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வருகிறது.

வெற்றி நிச்சயம் கிடைக்கும்

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. சிறந்த சாலை வசதிகள், விமான நிலையங்கள், கப்பல் தளம், சிறந்த உள்கட்டமைப்பு, மனிதவளம் உள்ளிட்டவைகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்காக உழைக்காமல், உங்களுக்காக உழையுங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார். தொடர்ந்து சிறந்த பெண்ணுக்கான தொழில் முனைவோர் நினைவு பரிசுகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

முடிவில், பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு நன்றி கூறினார்.

கருத்தரங்கத்தில் விஜிலா சத்யானந்த் எம்.பி. மற்றும் சுய உதவிக்குழுவினர், தொழில் முனைவோர்கள், கல்லூரி மாணவிகள், வங்கி அதிகாரிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பல்கலைக்கழக பெண் கல்வி முனைவோர் மைய இயக்குனர் பியூலா சேகர் செய்து இருந்தார்.

மேலும் செய்திகள்