தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகள் நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் தகவல்

தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடும் வேலை நடந்து வருவதாக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் கூறினார்.

Update: 2018-09-08 21:30 GMT
நெல்லை, 

தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1,200 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடும் வேலை நடந்து வருவதாக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் கூறினார்.

தமிழக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் 

தமிழகத்தில் நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கட்டுப்பாட்டில் 11 மாநகராட்சிகள் (சென்னை தவிர), 124 நகராட்சிகள் உள்ளன. இதில் திண்டுக்கல் மாநகராட்சி தவிர 10 மாநகராட்சிகளில் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது ரூ.5 ஆயிரம் கோடிக்கு அனுமதி பெற்று விட்டோம். இதில் ரூ.1,200 கோடிக்கு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் விடும் வேலை நடந்து வருகிறது.

இதில் நெல்லை மாநகராட்சியில் ரூ.1,000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் நெல்லையப்பர் கோவிலை சுற்றி உள்ள பகுதியை அழகுபடுத்துதல், சந்திப்பு பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், பாளை பஸ்நிலையம் ஆகியவற்றை மேம்படுத்துதல், பாளையங்கோட்டை மற்றும் டவுன் காய்கறி மார்க்கெட்டுகளை மேம்படுத்துதல், நயினார்குளம், தாமிரபரணி நதிக்கரையை மேம்படுத்துதல், லாரி முனையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

தாமிரபரணி புஷ்கர விழா 

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். முன்பு பாதாள சாக்கடை இணைப்புக்கு சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மனு செய்து காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய திட்டப்படி பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும்போது அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளின் கழிவுகளும் வந்து சேரும் வகையில் இணைப்பு கொடுக்கப்படும். இதற்காக விண்ணப்பிக்க தேவையில்லை. எனவே வருகிற 2021–ம் ஆண்டுக்குள் தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவு நீர் கூட கலக்காமல் தடுக்கப்படும்.

தற்போது தாமிரபரணி புஷ்கர விழா நடைபெற உள்ளது. இதையொட்டி தற்காலிகமாக கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் தடுக்கும் வகையில் பக்கவாட்டில் கால்வாய் அமைத்து கழிவுநீர் வெளியே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

35 பைசாவுக்கு 1 லிட்டர் குடிநீர் 

தமிழகத்தில் சமுதாய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 4 ஆயிரத்து 252 வார்டுகள் உள்ளன. இங்கு தனியார் பங்களிப்புடன் ஒரு வார்டுக்கு ஒரு குடிநீர் மையம் அமைக்கப்படும். இங்கு அனைத்து நவீன வசதிகளுடன் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு 1 லிட்டர் குடிநீர் 35 பைசாவுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் நாராயணன் நாயர் தலைமையில் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

100 சதவீதம் குடிநீர் 

நெல்லை மாநகர பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.275 கோடி செலவில் தாமிரபரணி ஆற்றில் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளது. இதன்மூலம் அனைத்து தெருக்களுக்கும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைத்து விடும்.

அதாவது இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பகிர்மான குடிநீர் குழாய்கள் பதிக்கும்போதே, அதிலிருந்து அனைத்து வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக குடிநீர் இணைப்பை வழங்கி விடும். எனவே விரைவில் 100 சதவீதம் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைத்து விடும். இதற்கு பொதுமக்கள் தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.

குப்பைகள் இருக்காது 

நெல்லை மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரே இடத்தில் கொண்டு குவிக்காமல் 45 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரக்குடிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குகிறோம். மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது.

இதன்மூலம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பது தவிர்க்கப்பட்டு, குப்பையே இல்லாத நிலை ஏற்படும். நெல்லை மாநகராட்சியில் தற்போது இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பேட்டரி வாகனங்கள் 

மாநகராட்சியை சுத்தமாக பராமரிப்பதில் துப்புரவு தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது ஆகும். அவர்கள் தற்போது மிதிவண்டி, தள்ளுவண்டி ஆகியவற்றின் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கிறார்கள். கடினமான இந்த பணியை எளிமைப்படுத்தும் வகையில் சூரியஒளி மின்சக்தி வாகனங்கள், பேட்டரி வாகனங்கள் மற்றும் மினி லோடு ஆட்டோ ஆகியவை வழங்கப்பட உள்ளன.

தற்போது முன்மாதிரியாக நெல்லையில் வங்கிகள் மூலம் 19 சூரியஒளி மின்சக்தி வாகனங்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் தேவையான எண்ணிக்கையில் இத்தகைய வாகனங்கள் வழங்கப்பட்டு விடும். இனிமேல், தள்ளுவண்டி மூலம் குப்பை சேகரிக்கப்படாது.

இவ்வாறு அவர் பேசினார்.

சூரியஒளி மின்சக்தி வாகனம் 

இதைத்தொடர்ந்து அவர் சூரியஒளி மின்சக்தியில் இயங்கும் 19 குப்பை சேகரிப்பு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் விவசாயிகளுக்கு மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை வழங்கினார். அப்போது ஒரு விவசாயி மாநகராட்சி வழங்கிய இயற்கை உரம் போட்டு தனது தோட்டத்தில் விளைவித்த வாழைத்தாரை கொண்டு வந்து அதிகாரிகளிடம் வழங்கினார்.

விழாவில், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) நாராயணன், மண்டல உதவி ஆணையாளர்கள் கீதா, கவிதா, சுப்புலட்சுமி, அய்யப்பன், உதவி செயற்பொறியாளர்கள் சாமுவேல் செல்வராஜ், கருப்பசாமி, பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்