தடுப்பு சுவர் கட்டும் பணியால் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமைகள் இனப்பெருக்கம் குறையும் அபாயம்

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் பராங்கற்கள் குவித்து கட்டப்படும் தடுப்பு சுவரால் கடல் ஆமைகள் இனப்பெருக்கம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் விளக்கியுள்ளனர்.

Update: 2018-09-08 23:00 GMT

ராமேசுவரம்,

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின், கடல் பசு, திமிங்கலம், கடல் விசிறி, கடல் பன்றி, கடல் ஆமை மற்றும் பவளப்பாறைகள் என 3 ஆயிரத்து 600 வகையான அரிய கடல் வாழ் உயிரினங்கள் இருப்தாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் பச்சைஆமை, சித்தாமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என்ற வகைகள் உள்ளன. ஆண்டு தோறும் கடல் ஆமைகள் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் சீசன் ஆகும். ஆண் ஆமையோடு இனப்பெருக்கம் செய்த பெண் ஆமை, முட்டையிடுவதற்காக மணற்பாங்கான கடற்கரையை நோக்கி வரும்.

கடற்கரையில் சுமார் 2 அடி ஆழத்தில் குழி தோண்டி முட்டையிட்டு விட்டு, மணலால் குழியை மூடி விட்டு மீண்டும் கடலுக்கே சென்று விடும். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர 55 முதல் 65 நாட்கள் வரை ஆகும். முட்டையிலிருந்து வெளி வரும் ஆமை குஞ்சுகள் கடற்கரை வழியாக ஊர்ந்து கடல் நீரில் நீந்தி ஆழ் கடலை நோக்கி சென்று விடும்.

மாவட்டத்தில் ராமேசுவரம் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் முதல் கம்பிப்பாடு, அரிச்சல்முனை வரை உள்ள கடற்கரை பகுதி ஆமைகள் முட்டையிடுவதற்கு உகந்த பகுதியாக வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் பல இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு, பொரிப்பகத்தில் வைத்து குஞ்சு பொரித்த பின்பு சுமார் 15 ஆயிரம் ஆமை குஞ்சுகள் தனுஷ்கோடி கடலில் விடப்பட்டன.

இந்தநிலையில் தனுஷ்கோடி கம்பிப்பாடு–அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறங்களிலும் ஆழமாக தோண்டி பாராங்கற்கள் குவிக்கப்பட்டு கூடுதலாக தடுப்பு சுவர்கள் கட்டும் பணி கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் வடக்கு கடற்கரை பகுதியில் சுவர் கட்டும் பணி முடிந்து, தற்போது தெற்கு கடற்கரை பகுதியில் தடுப்புசுவர்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆமைகள் முட்டையிட வரும் கடற்கரை பகுதியில் அதிக அளவில் கற்களை குவித்து தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு வருவதால், தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் வரும் ஆண்டுகளில் ஆமைகள் முட்டையிட வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன் ஆமைகளின் இனப் பெருக்கமும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று வனத்துறையினரும், மீனவர்களும் தெரிவித்தனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

 ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம்–அரிச்சல்முனை கடற்கரை வரை உள்ள பகுதி கடல் ஆமைகள் முட்டையிடுவதற்கு உகந்த பகுதியாக இருந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளை ஆமைகள் இட்டு சென்றுள்ளன. ஆனால் தனுஷ்கோடி கம்பிபாடு–அரிச்சல்முனை இடையே தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு வருவதால் வரும் ஆண்டுகளில் ஆமைகள் முட்டையிட இந்த பகுதிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆமைகளை அழிவில் இருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைதுறையினர் ஆமைகள் கடற்கரைபகுதிக்கு வரமுடியாதபடி தடுப்பு சுவர் கட்டி வருகின்றனர். எனவே கடற்கரை பகுதியை முழுமையாக மறைத்து தடுப்பு சுவர்கள் கட்டாமல், ஆமைகள் கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டு செல்லும் வகையில் கடற்கரை பகுதி வழக்கம் போல இருப்பதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்