மாவட்ட செய்திகள்
விடிய, விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: கைதான திட்ட இயக்குனர் வீட்டில் ரூ.8 லட்சம் சிக்கியது

லஞ்சம் வாங்கியபோது கைதான திட்ட இயக்குனர் வீட்டில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.8 லட்சம் சிக்கியது.
கிருஷ்ணகிரி,

திட்ட இயக்குனர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி டி.பி.ரோட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50). வெல்லமண்டி வைத்துள்ளார். இவர் மாவட்ட மைய நூலகம் எதிரில் உள்ள ஊரக வளர்ச்சி திட்ட முகமைக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடை ஒன்றை வாடகைக்கு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அந்த கடையை வாடகைக்கு பெற்று தருவதாகவும், அதற்காக திட்ட இயக்குனர் நரசிம்மனுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என அந்த அலுவலக பதிவு எழுத்தர் சத்யமூர்த்தி (32) ஜெயக்குமாரிடம் தெரிவித்தார். பணத்தை கொடுக்க விரும்பாத ஜெயக்குமார் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி ரூ.15 ஆயிரத்தை ஜெயக்குமார் நேற்று முன்தினம் திட்ட இயக்குனர் நரசிம்மனிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்ட இயக்குனர் நரசிம்மனை கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த பதிவு எழுத்தர் சத்யமூர்த்தி, அலுவலக உதவியாளர் அசோக்ராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள திட்ட இயக்குனர் நரசிம்மனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தினார்கள்.

இதில் கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 5 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொகை பாலித்தீன் கவரில் சுற்றி வைக்கப்பட்டு ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் கைதான 3 பேரையும் நேற்று காலை கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) மோனிகா முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.