மாவட்ட செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

தர்மபுரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன்.மகேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, திராவிடர் கழக நிர்வாகி ஊமை ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாநில நிர்வாகி ராமன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி யாஷின், முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகி நிஜாம், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி வேடியப்பன் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் அடைக்க வியாபாரிகளை கேட்டுக்கொள்வது. தொழில் நிறுவனங்களை நாளை ஒரு நாள் அடைத்து போராட்டம் வெற்றிபெற செய்ய ஆதரவு கேட்பது. தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்று முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.