பாலியல் புகார் கூறிய மாணவி, 2 பேராசிரியைகள் வேறு கல்லூரிக்கு மாற்றம்

உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி மற்றும் உதவி பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்ட 2 காப்பாளர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை மூலம் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Update: 2018-09-08 23:15 GMT
வாணாபுரம்,

திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து 7 மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார்.

மேலும் மாணவி தங்கியிருந்த விடுதியில், காப்பாளர்களாக இருந்த 2 பேராசிரியைகள் உதவி பேராசிரியர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் கூறினார். பேராசிரியைகள் பேசியதாக கூறப்படும் பதிவு அடங்கிய ஆடியோக்களையும் மாணவி வெளியிட்டார். இந்த சர்ச்சை வெடித்ததால் உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மாணவி கொடுத்த புகார் குறித்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தேர்வுகள் முடிந்து கடந்த திங்கட்கிழமை வகுப்புகள் தொடங்கின.

உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரிக்கு சென்றார். வகுப்பறைக்குள் அந்த மாணவி சென்றவுடன், சக மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு பேராசிரியைகள் கல்லூரியை விட்டு வெளியே சென்றனர். இதையடுத்து, மாணவியை கல்லூரி நிர்வாகம் வலுகட்டாயமாக வெளியேற்றியது.

தொடர்ந்து, இந்த வாரம் முழுவதும் மாணவியை வகுப்பறைக்குள் விடாமல் பேராசிரியர்கள் தடுத்தனர். மேலும், “தங்களால் அந்த மாணவிக்கு பாடம் நடத்த முடியாது, வேறு கல்லூரிக்கு அவரை மாற்றி விடுங்கள்” என்று கல்லூரி முதல்வரிடம் பேராசிரியர்கள் கூறினர். இதற்கு மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

“பாலியல் புகார் குறித்து விசாரணை நடைபெறும் நேரத்தில் நான் வேறு கல்லூரிக்கு எப்படி செல்ல முடியும். விசாரணைக்கு என்னால் ஆஜராக முடியாமல் போகும். நான் தொடர்ந்து இதே கல்லூரியில் தான் படிப்பேன்” என்று மாணவி திட்டவட்டமாக கூறினார். இந்த பிரச்சினையில் மாணவிக்கு ஆதரவாகவும், வேளாண்மை கல்லூரி பேராசிரியர்களுக்கு எதிராகவும் வாழவச்சனூர் கிராம பொதுமக்கள் போர்க்கொடி தூக்கினர்.

குற்றச்சாட்டில் சிக்கிய உதவி பேராசிரியர், காப்பாளர்களாக உள்ள 2 பேராசிரியைகளை தப்பிக்க வைக்க மாணவியை கல்லூரியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, கல்லூரி வளாகத்திற்குள் மாணவி வந்து செல்லும்போது அவரது நடவடிக்கையை ஒரு சில பேராசிரியர்கள் செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். இது தொடர்பாகவும் போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், பாலியல் புகார் கூறிய மாணவி திடீரென திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழு நடத்திய விசாரணை அடிப்படையில் மாணவியை திருச்சி கல்லூரிக்கு மாற்றியுள்ளதாக கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. திருவண்ணாமலை கல்லூரியில் இருந்து உடனடியாக வெளியேறி திருச்சி கல்லூரியில் சேருமாறு மாணவிக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவு ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான விடுதி காப்பாளர்களான 2 பேராசிரியைகளும் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒரு பேராசிரியை திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கும் மற்றொரு பேராசிரியை கோவை வேளாண்மை கல்லூரிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்