தசரா யானைகளுக்கு 2 வேளை சத்தான உணவு வழங்கப்படுகிறது

தசரா யானைகளுக்கு தினமும் 2 வேளை சத்தான உணவு வழங்கப்படுகிறது. பாகன்களின் குழந்தைகளுடைய படிப்புக்காக 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-09-08 22:24 GMT

மைசூரு,

மைசூரு தசரா விழா உலக பிரசித்திப்பெற்றது. இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம்(அக்டோபர்) 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரண்மனை நிர்வாகத்தினர் தடபுடலாக செய்து வருகிறார்கள்.

தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியாக ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். இதில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை ராஜநடைபோட்டு சுமந்து செல்ல, மற்ற யானைகள் அதை சூழ்ந்து செல்லும். யானைகள் படையெடுத்து செல்லும் அந்த கண்கொள்ளா காட்சியைக் காண உள்ளூர், வெளியூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தசரா விழா தொடங்கியது முதல் தொடர்ந்து 2 மாத காலத்திற்கு மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளிக்கும்.

இப்படி பல்வேறு சிறப்புமிக்க தசரா விழாவில் பங்கேற்கும் 6 யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன. தற்போது அந்த யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த 6 யானைகளும் முதல்கட்டமாக மைசூருவுக்கு அழைத்து வரப்பட்ட யானைகள் ஆகும். தற்போது இந்த 6 யானைகளும் மைசூரு அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

அங்கு தினமும் அந்த யானைகளை குளிப்பாட்டுதல், அவைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தல், சத்துணவு வழங்குதல், அவைகள் தங்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

யானைகளுக்கு தினமும் வேக வைத்த பாசி பயிர், உழுந்து, கோதுமை, புழுங்கல் அரிசி சாதம், வெங்காயம், வெல்லம், உப்பு, தேங்காய், புண்ணாக்கு, கரும்பு போன்ற உணவுகள் 2 வேளைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அவைகள் மெல்லுவதற்கு ஆலமரத்தின் இலைகள், வைக்கோல், நெல், உப்பு ஆகியவற்றை சேர்த்து உருண்டையாக்கி கொடுக்கப்படுகின்றன.

யானைகளின் கால் பகுதியில் சங்கிலியால் கட்டப்படுவதால், அவைகளுக்கு காயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 4 கால்களிலும் எண்ணெய் பூசப்படுகிறது. சிறுசிறு காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றுக்கு மருந்து போட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவைகளை கண்காணிப்பதற்காக ஒரு கால்நடை டாக்டரும் அரண்மனையில் பணியமர்த்தப்பட்டு, அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்படுள்ளது. அதேபோல் யானை பாகன்கள், அவர்களுடைய குடும்பத்தினர் தங்குவதற்கும் இடவசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பாகன்களின் குழந்தைகளின் படிப்புக்காக 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் அரண்மனைக்கு வந்து பாகன்களின் குழந்தைகளுக்கு பாடம் நடத்திவிட்டு செல்கிறார்கள். மேலும் அக்குழந்தைகளுக்கு பள்ளி சீருடை, புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

பாகன்களின் குடும்பத்தினருக்கு தேவையான ரேஷன் பொருட்கள், பாய், போர்வை, அடுப்பு, மண்எண்ணெய் போன்றவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் ஒருவாரம் கழித்து 2-வது கட்ட தசரா யானைகள் மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட உள்ளன. 2-வது கட்டமாக 6 யானைகளை அழைத்து வர திட்டமிடப்பட்டு உள்ளது.

தற்போது வந்துள்ள தசரா யானைகள் அவற்றின் பாகன்கள், வளர்ப்பாளர்கள் ஆகியோர் சொல்படியே நடக்கிறது. அவைகள் சிறுபிள்ளைகள் போல் விளையாடுவது அரண்மனைக்கு வருபவர்கள் பார்த்து மகிழ்கிறார்கள்.

மேலும் செய்திகள்